Categories
தேசிய செய்திகள்

நாங்களும் சளைத்தவர்கள் அல்ல…. ஒப்புதல் கிடைத்தால் மருந்து தயார் ஆகிவிடும் – களத்தில் இறங்கிய இந்தியா

கொரோனா தொற்றுக்கு எதிராக பல்நோக்கு தடுப்பூசியை பயன்படுத்த சோதனை செய்து வருகிறது இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையம்

உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனாவிற்கு எதிராக இந்தியா பல்நோக்கு தடுப்பூசியை சோதனை செய்து வருகிறது என அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த இயக்குனர் ஜெனரல் டாக்டர் சேகர் மண்டே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது “கொரோனா வைரஸ்க்கு எதிராக திறன்பட செயலாற்றும் பல்நோக்கு தடுப்பூசியை விஞ்ஞானிகள் பரிசோதனை செய்து வருகிறார்கள்.

மேலும் அந்த தடுப்பூசி தொற்றை சமாளிக்க உதவுமா என்றும் ஆய்வினை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த பல்நோக்கு தடுப்பூசி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி புரியும். இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரலின் ஒப்புதலுடன் தொற்று நோய்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட அதிக சக்தி வாய்ந்த தடுப்பூசிகள் பற்றிய சோதனையை ஆரம்பித்துள்ளோம்.

தடுப்பூசி தயார் செய்வது என்பது ஒரு பெரிய செயல்முறையாகும். அதற்கான ஆராய்ச்சியும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தடுப்பூசியை உருவாக்கி வருகிறோம். இன்னும் இரண்டு ஒப்புதல்கள் கிடைத்துவிட்டால் சோதனையை தொடங்கிவிடுவோம். அடுத்த ஆறு வாரங்களுக்குள் முடிவுகளும் கிடைத்துவிடும். கொரோனாவின் தோற்றம் மற்றும் பரவலை கண்டறிய உதவக்கூடிய மரபணுவை வரிசைப் படுத்தும் பணியில் நமது இந்தியா ஈடுபட்டு வருகின்றது.

வைரசுக்கு எதிராக மருந்துகள் பயன்படுத்தப்படும் பொழுது அதற்கு எதிர்ப்பை வளர்த்துக் கொள்கிறதா என்பதனை அறிந்து கொள்ள இது உதவும்” என கூறினார். கொரோனா தொற்றுக்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க குறைந்தது ஒரு வருட காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. அமெரிக்கா சீனா உட்பட பல நாடுகள் தடுப்பூசியை விரைவில் கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |