கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய 12,000 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்தடைந்தன. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கொரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு சுமார் 6 மணி நேரம் தேவைப்படுவதால் ஒரு நாளுக்கு குறைந்த அளவிலான நபர்களையே சோதனை செய்ய முடிகிறது.
மேலும் நேர விரயம் ஆகிறது. இதனால் சீனாவில் பின்பற்றிய முறையை பயன்படுத்தி கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சீனாவில் இருந்து வந்த ரேபிட் டெஸ்ட் கருவிகளை முதற்கட்டமாக 24,000 கருவிகளை மத்திய அரசு நேற்று சென்னை அனுப்பிவைத்தது. அதில் 12,000 கருவிகள் சென்னைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக சேலத்தில் “ரேபிட் டெஸ்ட் கருவி” மூலம் கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கியது. சேலம் மாநகராட்சிக்கு 5000 கருவிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஆரம்பகட்ட பரிசோதனைக்காக இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. சேலத்தை பொறுத்தவரை 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுடன் நெருங்கி பழகிய 27 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதற்கட்டமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த கருவிகள் மூலம் கொரோனா தொற்று இருப்பதை அதிவிரைவாக அறிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.