ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பது பிரம்மாண்டமான கட்டிடங்களோ நீண்ட அகலமான பெரிய பெரிய சாலைகள் மற்றும் பாலங்களோ இல்லை. உண்மையில் ஒரு நாட்டிற்கு அழகு சேர்ப்பது அந்நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சார பண்பாடுகளை பறைசாற்றும் பழங்காலச் சின்னங்கள்.
இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், காலத்தால் அழியாத கல்வெட்டுகள், கலைநயம் பொருந்திய ஓவியங்கள், சிற்பங்கள் போன்றவையே உலக அளவில் பழங்கால சின்னங்கள். கலைப் பொக்கிஷங்கள் பல அக்கறை இன்மையால் அதன் பொலிவை இழந்தும் சிதைந்தும் வருவதை நாம் காணமுடியும்.
இவற்றை இப்படியே விட்டுவிட்டால் வரலாற்றுச் சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் வரும் தலைமுறைக்கும் வரலாற்று சின்னங்களில் அருமையையும், பெருமையையும் அறிந்து கொள்ள முடியாமல் போய்விடுமே என்பதை கவனத்தில் கொண்ட யுனஸ்கொ அமைப்பு, 1982 ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற பாரம்பரிய சின்னங்களை பாதுகாப்பது பற்றிய மாநாட்டில் உலக அளவில் அறிய பொக்கிசமாக அமைந்துள்ள பாரம்பரிய மற்றும் கலாசார சின்னங்கள் காக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ஆம் நாள் உலக பாரம்பரிய தளமாக அறிவித்து அவற்றின் பயன்கள் மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் சிறந்த கலாச்சாரம் மற்றும் இயற்கை அமைவிடங்களை மரபுரிமை சின்னங்களாகவும் சர்வதேச அளவில் 936 பண்பாட்டுச் சின்னங்களாகவும் இவற்றில் 225 இடங்கள் கலாசாரத்தையும் 183 இயற்கை அமைப்புகளையும் மீதமுள்ள 28 இடங்கள் பண்பாட்டுச் சின்னங்களாகவும் இயற்கை அமைவிடமாகவும் யுனஸ்கொ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
உலகில் அதிகமான பாரம்பரிய சின்னங்கள் கொண்ட ஏழாவது நாடு என்ற பெருமையை பெற்றுள்ள இந்தியாவில் தாஜ்மஹால், குதுப்மினார் போன்ற இடங்கள் உலகின் மரபுரிமை சின்னங்களாகவும் தமிழகத்தில் நீலகிரி மலை ரயில், மாமல்லபுரம் சிற்பங்கள், சோழர் கோவில்கள், மேற்கு தொடர்ச்சி மலை போன்றவை இப்பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒவ்வொரு நாடும் தங்களுக்கு என்று பல்வேறு பாரம்பரிய கலாசாரங்களை கொண்டிருந்தாலும் ஒரு சில பாரம்பரிய சின்னங்கள் மற்றும் இயற்கை அமைவிடங்கள் சிறப்பு வாய்ந்தவையாக அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. இதுபோன்ற நினைவுச் சின்னங்களை பாதுகாக்க யுனஸ்கொ போன்ற அமைப்புகள் நிதி உதவிகள் செய்து வந்தாலும் இன்றைக்கு பெரும்பாலான இடங்களில் போதுமான பராமரிப்பு இல்லாமல் இந்த தொன்மையான சின்னங்கள் சிதலமடைந்து அதன் சிறப்பையும் இழந்து வருவது வேதனையான ஒன்றே.
இந்நிலையில் அவற்றின் பெருமைகளை கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி அமைத்து விவரிப்பது, பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பவர்களை தட்டிக் கொடுப்பது, பள்ளிகளில் பாரம்பரிய சின்னங்களின் பயன்பாடு மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினால் இத்தினத்தின் நோக்கம் சிறப்படைந்து பொறுப்பையும் அதிகரிக்கும்.