தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30ற்கும் கீழாக இருந்து வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வந்ததாக சொல்லப்பட்டது. நேற்று திடீரென 50க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா கட்டுக்குள் இல்லை என்று மக்களுக்கு அச்சம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.
இதில் இன்று ஒரே நாளில் 5363 பேருக்கு டெஸ்ட் செய்துள்ளதால், டெஸ்ட் செய்தவர்களின் எண்ணிக்கை 35,036ஆக உயர்ந்துள்ளது. இன்று 49 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,372ஆக உயர்ந்துள்ளது. இதில் 4 பேர் இக்கட்டான நிலையில் உள்ளார்கள். நேற்றும், இன்றும் மரணம் இல்லை. இன்று 82 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 365 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்தார்.