Categories
உலக செய்திகள்

சீனாவை விட்டுறாதீங்க, உடனே விசாரியுங்க – டிரம்புக்கு கோரிக்கை …!!

கொரோனா தொடர்பாக சர்வதேச விசாரணை மேற்கொள்ள அதிபர் டிரம்ப்க்கு  7 எம்பிக்கள் கையெழுத்திட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்

அதிபர் டிரம்புக்கு நாட்டின் குடியரசு கட்சியின் செனட் சபை எம்.பி. மார்கோ ரூபியோ தலைமையிலான எம்பிகள் குழு ஒன்று திரண்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். கடிதத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் முடிவு, கொரோனா வைரஸின் தோற்றம் ஆகியவை பற்றி வெளிப்படையான விசாரணையை தொடர நட்பு நாடுகளான தென்கொரியா, ஐரோப்பிய, ஜப்பானுடன் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தி 7 எம்பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

கடிதத்தில் கூறப்பட்ட முக்கிய அம்சங்கள்:

  • சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய தொற்றுநோயை ஆரம்பத்திலிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி மறைப்பதும் திசை திரும்புவதும் மட்டுமல்லாமல் அமெரிக்காவையே நேரடியாக குற்றம்சாட்ட முயற்சித்து வருகிறது.
  • கொரோனா தொற்று எங்கு தோன்றியது என்பது குறித்தும் உலக சுகாதார நிறுவனம் போன்ற பன்னாட்டு அமைப்புகளை தனக்கு ஆதரவாக சீனா பயன்படுத்துவது குறித்தும் முழுமையான சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.
  • இதுகுறித்து நமது நட்பு நாடுகளான ஜப்பான், ஐரோப்பிய மற்றும் தென்கொரியா நாடுகளுடன் இணைந்து அமெரிக்க நிர்வாகமும் நமது வெளியுறவுத் துறை மந்திரியும் பணியாற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
  • விசாரணையின்போது கொரோனா தொற்று பரவத் தொடங்கிய போது உலக சுகாதார நிறுவனம் எடுத்த முடிவு பற்றிய விரிவான புரிதலுக்கும் வழிவகுக்க வேண்டியது அவசியம்.
  • கொரோனா தொற்றுக்கு எதிராக விசாரணை மற்றும் நடவடிக்கைகளை சர்வதேச அளவில் ஒருங்கிணைக்க ஒரு உயர்மட்டக் குழுவை நீங்கள் அமைக்க வேண்டும்.
  • தொற்று பரவலை பற்றி மறைப்பதற்கு சீனாவிடமிருந்து உலக சுகாதார நிறுவனத்திற்கு அழுத்தம் வந்ததா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். நடத்தப்படும் விசாரணையானது வெளிப்படையாகவும் இருக்க வேண்டும்.

இவ்வாறு அக்கடிதத்தில் கூறியிருந்தனர்.

ஏற்கனவே உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சர்வதேச அளவிலான விசாரணை மேற்கொண்டால் அது உலக சுகாதார நிறுவனத்திற்கும் சீனாவிற்கும் பெரும் நெருக்கடியை உறுதியாக ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |