தனது பிறந்த நாளுக்கு வாழ்த்த யாரும் வரவில்லை என வருத்தமடைந்த சிறுவனுக்கு காவல் துறையினர் சைரன் ஒலித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவில் கொரோனா பரவி ஏராளமானோர் பாதிக்கப்பட்டு பல உயிர்கள் போன காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வீட்டில் இருந்து வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க முடியாத சூழலில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் வீட்டில் எளிமையான முறையில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய சிறுவனை வாழ்த்த நண்பர்கள் உறவினர்கள் என யாரும் வராததால் சிறுவன் கவலை அடைந்துள்ளான். இதனை அறிந்த அவனது தந்தை காவல்துறையினருக்கு தொடர்புகொண்டு சிறுவனின் நிலை குறித்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் ரோந்து வாகனங்களில் சிறுவனின் வீட்டின் முன்பு வந்து அணிவகுத்து நின்றதோடு சைரேன்களை ஒலித்து ஹாப்பி பர்த்டே பாடல் பாடி சிறுவனை மகிழ்வித்துள்ளனர். இச்சம்பவம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து “அமெரிக்க காவல்துறையினரின் அற்புதமான செயலைப் பாருங்கள்” என பதிவு செய்துள்ளார்