கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் திணறி வரும் அமெரிக்காவிற்கு உதவ நாசா மருத்துவ உபகரணங்கள் தயாரிக்க தொடங்கியுள்ளது
சீனாவின் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் பலவற்றிலும் பெருமளவு பாதித்து பல உயிர்களை பலி எடுத்துள்ளது. அதில் அமெரிக்கா அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை சமாளிக்க தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா பெரிதும் திணறி வருகிறது. இச்சூழலில் அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கலிபோர்னியா மாகாண தடுப்பு பணி குழுவுடன் இணைந்து மருத்துவ உபகரணங்களை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில் “ஆன்டிலோப் வேலி மருத்துவமனை, லாண்செஸ்சர் நகரம், வெர்ஜின் கெலக்டிக் நிறுவனம், தி ஸ்பேஸ் கம்பெனி, ஆன்டிலோப் வேலி கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து ஆம்ஸ்ட்ராங் விமான ஆராய்ச்சி மையம் கூடுதலாக மருத்துவ உபகரணங்களை உருவாக்குவது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது” என தெரிவித்துள்ளது. குழுவில் இனைந்து முதல் கட்டமாக ஆக்சிஜனை வழங்கும் கருவியின் மாதிரியை உருவாக்க திட்டமிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் கருவியை உருவாக்கும் பணி தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.