டெல்லியில் ஊரடங்கு தளர்வு இல்லை என அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
டெல்லியில் 76 இடங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளாக இருப்பதால், டெல்லியில் ஊரடங்கு தளர்வுக்கு வாய்ப்பில்லை என முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறியுள்ளார். டெல்லியில் 1069 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய சூழலில் ஊரடங்கு உத்தரவு அவசியம் என குறிப்பிட்ட அவர், வரும் 27ம் தேதி மறு ஆய்வுக்கூட்டம் நடைபெறும், அதில் ஊரடங்கு தளர்வு குறித்து ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தகவல் அளித்துள்ளார்.
மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் சில தொழில்களுக்கு தளர்வு அளித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனினும் மறு உத்தரவு வரும் வரை தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைகள் தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் டெல்லியிலும் ஊரடங்கில் தளர்வு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெல்லியில் புதிதாக கொரோனா உறுதியான 186 பேரும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்துள்ளனர். அறிகுறியே இல்லாமல் 186 பேருக்கு கொரோனா உறுதியான விவகாரம் கவலையளிக்கிறது என வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார். நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நான் பேசினேன். அவர் அரசின் உணவு விநியோகப் பணியில் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்.
அவர் அரசின் உணவு விநியோக மையத்தில் மக்களுக்கு உணவு அளிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அவர் இருந்த அந்த மையத்திற்கு வந்து சென்றவர்களுக்கு ரேபிட் டெஸ்ட்டை விரைந்து செய்ய உத்தரவிட்டுள்ளேன். எங்கள் மையங்களில் பணிபுரியும் மற்றவர்களும் சோதனை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார். டெல்லியில் சீரான வேகத்தில் கொரோனா பரவி வருகிறது என்றாலும் கட்டுக்குள் தான் இருக்கிறது, மக்கள் பீதி அடையத்தேவையில்லை என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.