இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 1,60,755ஆக உள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,334 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக சுகாதாரத்துறை இணை செயலர் தகவல் அளித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3,86,791 ரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் 37,173 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,116ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 519 பேர் உயிரிழந்துள்ளனர். 14 நாட்களாக 43 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலத்தில் மேலும் 228 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,604ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் 10 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் 2 மருத்துவர்கள் மற்றும் 6 செவிலியர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல மகாராட்டிராவில் உள்ள நாக்பூரில் புதிதாக 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது.
ராஜஸ்தானில் புதிதாக 44 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அங்கு கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,395ஆக உயர்ந்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூரில் கொரோனா பாதிப்பால் காவல் அதிகாரி தேவேந்தர் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளர். நேற்று பஞ்சாப்பின் லூதியானாவில் காவல் துணை ஆணையர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் கொரோனா வைரஸிற்கு பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.