அமெரிக்காவில் தவிக்கும் எங்களுக்கு அரசு உதவி புரிய வேண்டுமென சௌந்தர்யா கோரிக்கை வைத்துள்ளார்
அனுபம் கேர் தயாரித்த ராஞ்சி டைரீஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமான சௌந்தர்யா ஷர்மா இத்திரைப்படத்திற்கு அறிமுக நடிகை விருதை வாங்கியவர். பல் மருத்துவரான சௌந்தர்யா நடிப்பில் இருந்த ஆர்வத்தினால் தேசிய நாடகப் பள்ளியில் பயின்று சொந்தமாக மஸ்டர்ட் அண்ட் ரெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
தனது அடுத்தப்பட வேலைக்காக அமெரிக்கா நியூயார்க் நகரில் பிலிம் அகடமி நடத்தும் ஒர்க்ஷாப்பில் பங்கேற்க சென்றிருந்த சமயம் கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அங்கேயே சிக்கியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நியூயார்க்கில் சிக்கியிருக்கும் சௌந்தர்யா, மாணவர்களை மீட்க இந்திய அரசு உடனடியாக உதவ வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சுமார் 400 மாணவர்கள் இங்கு சிக்கியுள்ளனர். வாழ்வதற்கு மிகவும் கடினமான சூழல் நிலவி வருகிறது. ஒவ்வொருவருக்கும் இது சவாலான நேரம். போதுமான அளவு தங்கும் வசதி இல்லாமல் மாணவர்கள் பெரிதும் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்திய தூதரகம் எந்த உதவியும் செய்யவில்லை அதனால் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்துள்ளார்.