பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவித்து, அந்த பகுதிகளில் ஒரு வழி பாதையை அரசு அமைத்தது.
இந்த நிலையில் பெங்களுருவின் 135வது வார்டு பகுதியான பாடரயணபுரா கடந்த ஏப்.10ம் தேதி அன்று ஹாட் ஸ்பாட் பகுதியாக அறிவிக்கப்பட்டது. இந்த பகுதியில் ஏற்கனவே 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேருக்கு கொரோனா சோதனை நடைபெற்று வந்தது. அதேபோல, மற்றவர்களுக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், அப்பகுதியில் கொரோனா பரிசோதனையை மிகவும் தாமதமாக நடத்துவதாக கூறி நேற்று மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500 பேருக்கு சோதனை நடத்தப்பட வேண்டிய நிலையில், அனைவரையும் காக்க வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அங்கிருந்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மக்களை தடுக்க முயன்றபோது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது.
அங்கிருந்த பரிசோதனை கூடாரங்களை பொதுமக்களை தகர்த்தனர். இதனை தொடர்ந்து, கலவரத்திற்கு காரணமானவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இதுவரை 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, ” கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.