தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளில் எந்த தளர்வுகளும் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் சில தொழில்களுக்கு ஊரடங்கில் இருந்து தளர்வு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுத்தும் கொள்ளும் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால் ஊரடங்கு நெறிமுறைகள், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட 12 குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள நடைமுறை சிக்கல், அத்தியாவசியப் பொருட்களின் தேவை, ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, மே 3ம் தேதி வரை ஊரடங்கு தளர்த்தப்படாது என அறிவித்துள்ளார்.
அத்தியாவசிய பணிகள் மற்றும் சேவைகளுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட விதிவிலக்கு தொடரும். நோய்த்தொற்று குறைந்தால், வல்லுனர் குழுவின் ஆலோசனை பெற்று நிலைமைக்கு ஏற்ப உரிய முடிவு எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நோய்த் தொற்று மேலும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.