ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது என மத்திய அரசு தகவல் அளித்துள்ளது.
இந்தியாவில் புதிதாக 1,553 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 17,265 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 36 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து குணமடைத்து வருவோரின் விகிதம் 14.75%ஆக உள்ளதாகவும், கடந்த 14 நாட்களில் 59 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை என தகவல் அளித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாத மாநிலமாக கோவா மாறியுள்ளது. ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்களில் கொரோனா தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. புதுச்சேரியில் மாஹே, கர்நாடாவில் குடகு, உத்தரகாண்டின் பவ்ரி கார்வாலில் பாதிப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களை மீறும் நடவடிக்கைகளை கேரளா அனுமதித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு எவ்வாறு அமல்படுத்தப்படுகிறது என்பதை கவனித்து வருகிறோம். ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது வருத்தமளிக்கிறது என்றும் ஊடகவியலாளர்கள் யாருக்கெல்லாம் கொரோனா பரிசோதனை தேவைப்படுகிறதோ அவர்களுக்கு உடனைடியாக பரிசோதனை நடத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.