ஊரடங்கு தளரத்தப்பட்டுள்ள நிலையில் ஊழியர்கள் பணிக்கு வர வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் நிலையில் ஊழியர்கள் அனைவரும் முக கவசத்துடன் பணிக்கு வரவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு காலம் மே 3ம் தேதி வரை நீடிக்கப்பட்டு நிலையில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் ஏற்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதுபடி தமிழகத்தில் அரசு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் வேலைக்கு வர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அரசுத் துறைகளின் இன்றியமையாத பணிகளுக்கான அலுவலர்கள் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் ஆகியோர் சுழற்சி முறையில் பணிபுரிய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. அலுவலகங்களுக்கு வரும் ஊழியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் முக கவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
அடிக்கடி அலுவலகத்தில் கைகளைக் கிருமி நாசினி கொண்டு கழுவ வேண்டும் என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாது பின்பற்றி பணிபுரிய வேண்டும் என்றும் அரசுத் துறைகளின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் எப்படி பணிக்கு வர முடியும் என்று ஊழியர்கள் தரப்பில் கேள்விகள் எழுந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.