உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது.
உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.
இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து வருகின்றன.இதனால் வாகன போக்குவரத்துக்கு தேவையான கச்சா எண்ணெயின் தேவை வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.மேலும் நேற்று ( திங்கள்கிழமை ) அமெரிக்க பங்குச்சந்தை தொடங்கியதும் கச்சா எண்ணெயின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்தது.
வரலாற்றிலே முதல் முறையாக ஒரு பேரல் அதாவது (158.98 லிட்டர்) கச்சா எண்ணெயின் விலை ஒரு டாலருக்கும் கீழ் அதாவது (இந்திய மதிப்பில் 76 ரூபாய் 66 பைசா)_க்கும் கீழ் சென்றது. துல்லியமாக சொல்லவேண்டுமென்றால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் -39.14 டாலர்கள் (மைனஸ்) என விற்கப்பட்டது. கச்சா எண்ணெய்யை வாங்குபவர்களிடம் பணமும் கொடுத்து எண்ணெய்யை வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் நிலைக்கு சென்றுள்ளது.
அமெரிக்க சந்தையில் கச்சா எண்ணெய் விலை இப்படி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக அதன் தேவை குறைந்து தேக்கம் அதிகரித்துள்ளது. இதனால் உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதி இல்லாமல், கச்சா எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமல் இருந்து வருகின்றார்கள். உலகளவில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு ஒரே நாளில் கச்சா எண்ணெயின் விலை இப்படி ஒரு சரிவை சந்தித்துள்ளதால் உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.