சென்னை தாம்பரத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டம் தாம்பரம் பகுதியை அடுத்த சீனிவாசன் நகரில் உள்ள முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்தமகள் திருமணமாகி தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார்.
அவரது இளைய மகள் சுமித்ரா மாற்றுத்திறனாளி. இவர் தந்தைக்கு உதவியாக கூலி வேலை செய்தும், வீட்டுப் பணிகளை மேற்கொண்டும் வந்துள்ளார். இந்நிலையில் கலா தனது தந்தை மற்றும் தங்கையை காண ஆந்திராவிலிருந்து சில நாட்களுக்கு முன் தாம்பரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால், தந்தையும், தங்கையும் கூலி வேலைக்கு செல்லாமல் வீட்டில் தான் நாட்களை கழித்து வந்தனர். இவர்களுடன் சேர்ந்து மூத்த மகளும் நாட்களை கழித்து வந்துள்ளார். எப்போதும் இவர்கள் மாலை நேரத்தில் பக்கத்து வீட்டின் சுவர் அருகே அமர்ந்து தான் பேசிக் கொண்டிருப்பார்கள்.
அதேபோல் நேற்று மாலை அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கிய மூவரை அக்கம்பக்கத்தினர் மீட்க முடியாமல் தவித்து தீயணைப்பு துறையினருக்கும் 108 அவசர ஊர்தி சேவைக்கும் தகவல் அளித்தனர். பின் விரைந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மூவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் மருத்துவமனைக்கு செல்லும் முன்பே இளைய மகள் சுமித்ரா பரிதாபமாக உயிரிழக்க தந்தையும் மூத்த மகளும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தனர். பக்கத்து வீட்டு சுவர் இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.