டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனோவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,70,423ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,81,026ஆக உயர்ந்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,601ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியரசு தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அங்கேயே அறை அளித்து தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குடும்பத்தினருடன் அங்கு தங்கி இருக்கும் நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் தொடர்பில் இருந்த 125 குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகத்தில் அறிவுறுத்தல்களை பின்பற்றி கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லியில் இதுவரை 2,081 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.