கொரோனா தொற்று எங்களிடம் இருந்து வரவில்லை என வூஹான் ஆய்வக அதிகாரி தெரிவித்துள்ளார்
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா தொற்று சீனாவில் இருக்கும் கடல்வாழ் உயிரினங்கள் சந்தையிலிருந்து உருவானது என வெகு காலமாக சொல்லப்பட்ட தகவல்கள் வெளி உலகுக்கு வரவும் அந்த சந்தை மூடப்பட்டது. இதுவரை அந்த சந்தை மூடியே இருக்கும் நிலையில் கொரோனா தொற்று இயற்கையாக உருவாவது அல்ல அது வூஹான் நகரில் இருக்கும் வைராலஜி ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளிவந்துள்ளது என அமெரிக்காவின் பாக்ஸ் நியூஸ் டெலிவிசன் செய்தி ஒன்றை வெளியிட்டு இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.
கொரோனா வைரசின் மரபணு வரிசை குறித்து சீன விஞ்ஞானிகள் அளித்த விவரங்களின் அடிப்படையில் அமெரிக்க ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த நுண்ணுயிரியல் துறையின் வல்லுனர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவு படி வைரஸ் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக இருக்க முடியாது என தெரியவந்துள்ளது.
மனித உடலில் இருக்கும் செல்களை துளைப்பதற்கான வைரஸில் இருக்கும் கூர்மையான கொக்கி போன்ற அமைப்பு இயற்கையாகவே உருவாகியிருக்க வேண்டும் எனும் முடிவுக்கு வந்த விஞ்ஞானிகள், வைரஸ் விலங்குகளிடம் இருந்து புதிய வடிவில் உருவாகி மனிதர்களுக்கு பரவி இருக்கக்கூடும் இல்லையென்றால் ஆபத்தற்ற நோய் வடிவில் பரவி மனிதர்களின் உடலில் புதிய கொரோனா வைரஸாக உருவாகியிருக்கலாம் என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் குற்றசாட்டு குறித்து சீன ஊடகத்திடம் பேசிய வூஹான் ஆய்வகத்தின் அதிகாரி இதற்கெல்லாம் என்ன ஆதாரம் இருக்கப்போகிறது, இது போன்ற குற்றச்சாட்டுகள் தவறானது. இது உலக அளவில் விஞ்ஞானிகளுக்கு இடையே இருக்கும் உறவை பிடிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் ஆய்வகத்தில் என்ன மாதிரியான ஆய்வு நடக்கிறது என்று எங்களுக்கு தெரியும். வைரஸ்களை எப்படி கையாளுவது என்றும் தெரியும் எங்களிடம் இருந்து இந்த வைரஸ் வர எந்த வழியும் இல்லை எனக் கூறியுள்ளார்.