டெல்லி ராஷ்டிரபதி பவனில் (குடியரசு தலைவர் மாளிகை) ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 125 குடும்பங்களை சுய தனிமைபடுத்தக்கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பணிபுரியும் துப்புரவு பெண் பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். இதையடுத்து குடியரசுத்தலைவர் மாளிகையில் உள்ள மற்றவர்களை பரிசோதித்தபோது, அவர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் அவர்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. டெல்லி பகுதியில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளில் 26 பேர் ஐ.சி.யு மற்றும் 5 வென்டிலேட்டரில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நேபி கரீம் பகுதியில் நேற்று விரைவான சோதனை (ரேபிட் டெஸ்ட் கிட்) தொடங்கியது. அதில் 74 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை” என வர கூறினார்.