மே 3ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. சமூக விலகலால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து, உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து, மக்களை வீடுகளில் முடக்கி வைத்துள்ளனர். இதனால் தனிநபர் பொருளாதாரம் மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று அமெரிக்காவில் கச்சா எண்ணெய் ஒரு டாலருக்கும் கீழ் சென்று உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் கொரோனாவில் இருந்து மீண்டு எப்போது உலகநாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பு வீட்டில் முடங்கி கிடக்கும் ஒவ்வொரு மக்களிடமும் உள்ளது. இதே நிலைதான் இந்தியாவிலும் நீடிக்கின்றது. கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசு முதன் முதலில் மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. 21 நாள் ஊரடங்கில் மக்கள் முழுமையாக வீட்டிற்குள் முடங்கினர். இதனால் கொரோனா கட்டுக்குள் வரும் என்று நினைத்ததில் எந்த பலனும் இல்லை.
மிகப்பெரிய நம்பிக்கை :
கொரோனா வேகம் எடுக்க ஆரம்பித்ததால் மத்திய அரசு மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்தது. இது மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை, ஆனாலும் பொருளாதாரரீதியில் ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும் நேற்று ( 20ஆம் தேதியில் இருந்து ) சில தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் மிகப் பெருமளவில் கேள்விக்குறியாகி இருந்ததால் எப்பொழுது ஊரடங்கு நிறைவடையும், எப்போது நாம் வேலைக்கு செல்வோம் என்று எதிர்பார்த்தவர்களுக்கு 20ஆம் தேதி மிகப்பெரிய நம்பிக்கை கொடுத்தது.
ஆனாலும் பல்வேறு மாநிலங்கள் கொரோனா தாக்கத்தை உணர்ந்து 20ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு இல்லை என்று அறிவித்தது, இதில் தமிழகமும் ஒன்று. கிட்டத்தட்ட இன்னும் 12 நாட்களில் ஊரடங்கு நிறைவு பெற இருக்கிறது. இதில் 20ஆம் தேதி ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வு இல்லை என்று மாநில அரசுக்கள் அறிவித்தது மே 3ஆம் தேதிக்கு பின்னும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா ? என்ற புதிய கேள்வியை அனைவரின் மனதிலும் விதைத்தது.
பிள்ளையார் சுழி :
அதேநேரம் கொரோனாவின் வீரியத்தை நினைத்துப் பார்க்கும் போது ஊரடங்கு மே 3ஆம் தேதி தளர்த்தப்படும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. நாளுக்குநாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதற்க்கு பிள்ளையார் சுழி போடுகின்ற வகையில் தெலுங்கானா மாநிலம் ஊரடங்கை மே 7ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. இதனால் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா ? என்ற பல்வேறு யூகங்களை மக்கள் அசை போடத் தொடங்கினர்.
ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டித்தால் என்ன செய்வது என்று மக்கள் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ள ஒரு உத்தரவு மக்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. மே 4ஆம் தேதி முதல் தமிழகம் வழக்கம் போல் இயங்குவதற்கான சமிக்கையாக தமிழக அரசின் இந்த உத்தரவு மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகங்கம் அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை மூலம் நாம் இதனை உணர்ந்து கொள்ள முடியும்.
பேருந்து இயக்கம் :
அதில் மே 4 முதல் தேதி முதல் சென்னையில் இயங்கும் அரசு பேருந்துகளில் பயணிகள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஓட்டுனர்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும். கொரோனா போன்ற அறிகுறிகள் இருந்தால் பணிக்கு வரவேண்டாம், விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அனைவரும் ஆரோக்கிய சேது செயலியை வைத்துக் கொள்ள வேண்டும். வேலை முடிந்த பிறகு பேருந்தை முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஏராளமான உத்தரவுகள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தன.
சென்னை போக்குவரத்து கழகத்தின் இந்த சுற்றறிக்கையை நாம் எடுத்துக் கொண்டால், ஊரடங்கு மே மூன்றாம் தேதியோடு முடிவடைகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். மாநில அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை உணர்த்துவது என்னவென்றால், மே4ம் தேதி பொது போக்குவரத்து இயங்குவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது. போக்குவரத்து இயங்கும் பட்சத்தில் கட்டாயம் ஊரடங்கு தளர்த்தப் படுவது உறுதி என்பதையே இந்த சுற்றறிக்கை காட்டுகின்றது. என்ன இருந்தாலும் கொரோனா ஒழிக்க வேண்டிய கட்டாயம் நம்முடைய அரசுக்கு இருக்கிறது. அதனை உணர்ந்து அரசு நல்ல முடிவு எடுக்கும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.