சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் 55 வயது மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த மருத்துவரின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மயானத்திற்கு அடக்கம் செய்ய எடுத்து செல்லப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டு வந்து எதிர்ப்பு தெரிவித்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை 110 பேர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி, மருத்துவர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை அளித்து மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னலம் கருதாமல் மக்கள் நலன் காக்கும் பணியில் ஈடுபட்டு இன்னுயிரை துறப்போருக்கு பொதுமக்கள் தகுந்த மரியாதை தர வேண்டும். கொரோனாவால் இறந்தோரின் இறுதிசடங்கின்போது நடந்த சம்பவங்கள் வருத்தமும், வேதனையையும் அளிக்கிறது என கூறிய அவர், கொரோனா தடுப்பு களப்பணியாளர்கள் அச்சப்பட தேவையில்லை.
களத்தில் போராடுபவர்கள் பக்கம் அரசு துணை நிற்கும் என அவர் உறுதியளித்துள்ளார். மேலும் கீழ்ப்பாக்கம் சம்பவம் போல் இனிமேல் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்கப்படும். உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களை இறைவனுக்கு நிகராக கருதுகிறேன் என கூறியுள்ளார். இதனிடையே கொரோனாவால் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தால் குண்டர் சட்டம் பாயும் என காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளது குறிபிடத்தக்கது.