ஒடிசாவில் கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தப்படும் என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பொதுமக்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்களும் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். அவர்களது உடலை அடக்கம் செய்தால் கொரோனா பாதிக்கும் என அச்சப்படும் மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சென்னை உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்த சம்பவர் அரங்கேறி வரும் நிலையில், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை தியாகிகளாக கருதி இறுதிச்சடங்கு நடத்தப்படும் என ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பு பணியின் போது உயிரிழக்கும் சுகாதார பணியாளர்கள் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவப் பணியாளர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
ஒடிசாவில் மொத்தம் 73 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 24 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர். ஒரே ஒருவர் தான் அங்கு இதுவரை உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஒடிசாவில் கொரோனாவை குணப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களில் சிறப்பு கொரோனா மருத்துவமனைகளை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் முடிவு செய்துள்ளார்.
ஒடிசாவில் மாவட்டத்திற்கு ஒன்று என்ற வீதத்தில் 36 மருத்துவமனைகளை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனாவிற்கு என்று தனியாக இரண்டு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்கியது ஒடிசா மட்டும்தான். அங்குதான் 1000 பேர் சிகிச்சை பெறும் வகையில் வெறும் 6 நாட்களில் இரண்டு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.