தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மே 3 வரை வீட்டில் இருந்தே பணியாற்றும் முறையை கடைபிடிக்க வேண்டும் என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னையில் உள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் தகவல் தொழில்நுட்பவியல் கூடுதல் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊரடங்கின் போது தொழில்நுட்ப நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டியவை குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் பேசிய அமைச்சர் உதயகுமார், ஐடி ஊழியர்கள் ஊரடங்கு முடியும் வரை வீட்டிலிருந்த படியே வேலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச்25ம் தேதியிலிருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், 2ம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 28வது நாளாக அமலில் உள்ளது.
அதேசமயம், ஏப்.20-லிருந்து கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் ஊரடங்கு தளர்வை அமல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியது. ஆனால், தமிழகத்தில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடுமையாக கடைபிடிக்கப்படும் எனவும், தளர்வுகள் இல்லை என்றும் தெரிவித்தது. தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,500- ஐ தாண்டியது.