நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்கின்றனர். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் காலை நேரங்களில் வெளியே வருகின்றனர். மற்ற நேரங்களில் வீட்டிற்குள்ளேயே அடைந்து இருக்கின்றனர்.
இப்படி பட்ட சூழ்நிலையில் வீட்டில் இருக்கும்பொழுது அனைவரும், முக்கியமாக, சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் வரை டி.வி. மற்றும் செல்போனை இடைவிடாமல் பார்த்தும், உபயோகித்தும் பொழுதை கழிக்கின்றனர். ஸ்மார்ட் போன்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் பலரும் மூழ்கி கிடக்கிறார்கள்.
இவைகளை தொடர்ந்து பார்ப்பதால் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய சூழல் உருவாகக்கூடும். இதை பற்றி, புதுக்கோட்டையை சேர்ந்த கண் மருத்துவ சிகிச்சை பெண் நிபுணர் ஒருவரிடம் கேட்டோம் அதற்கு அவர் சொன்ன பதில். பொதுவாக டி.வி, செல்போன் அதிகம் பார்ப்பதை பொதுமக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். அதுவும் இந்த ஊரடங்கு காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.
செல்போனில் உள்ள வெளிச்சம் கண்களை பாதிக்காமல் இருக்கும் வகையில் பயன்படுத்த வேண்டும். ஸ்மார்ட் போன்கள் போன்றவை பயன்படுத்துபவர்கள் இரவு நேரங்களில் இருட்டில் உக்காந்து செல்போனை பார்க்க கூடாது. தொடர்ந்து இடைவிடாமல் பயன்படுத்தக்கூடாது. இதனால் விரைவில் கண்களில் விழித்திரை பாதிக்கக்கூடும்.
உங்களுடைய கண் பார்வையை பாதிக்கப்படாத வகையில் கண்ணாடிகள் அணிந்து கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட நேரம் இடைவெளி விட்டு மொபைல் பயன்படுங்கள். டி.வி. பாருங்கள். 60 வயது கடந்தவர்கள் தொடர்ந்து டி.வி. பார்ப்பதையும், செல்போன் பயன்படுத்து வதையும் தவிர்த்து விடுங்கள். இது போலவே குழந்தைகளும் அதிகம் செல்போன் மொபைல் போன் பயன்படுவதை தவிர்த்து விடல் வேண்டும்.
உங்கள் கண்ணில் பாதிப்பு உண்டாகாமல் இருப்பதற்கு வைட்டமின் ‘ஏ‘ நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். அதாவது பால், கேரட், தக்காளி, மாம்பழம், மீன், ஆட்டு இறைச்சி, கீரை போன்றவற்றை சாப்பாட்டில் அதிகம் எடுத்து கொள்ளுங்கள். இவைகளை உண்பதனால் கண்களில் அந்த பாதிப்பும் ஏற்படவே செய்யாது.