Categories
மாநில செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் விவரத்தை வெளியிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படும்: ஐகோர்ட்!

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை வெளியிட உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. தனிநபர் சுதந்திரம் பாதிக்கப்படும் எனக்கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வழக்கு விவரம்: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் விவரங்களை வெளியிட வேண்டும் என சென்னையை சேர்ந்த நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, 6-ல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படுகிறது என்றும், உலகம் முழுவதும் ஏப்ரல் 3ம் தேதி வரை 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு, 50 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழந்துள்ளனர்.

ஏப்ரல் 3ம் தேதி வரை இந்தியாவில் 3 ஆயிரதத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு 84 பேர் உயிரிழந்திருப்பதாக மனுவில் புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டியிருந்தார். சுமார் 7 கோடி மக்கள் தொகை இருக்கக்கூடிய தமிழகத்தில் சென்னையில் மட்டும் ஏப்.3ம் தேதி வரை 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணத்தால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வைரஸ் தொற்று ஒருவரிடத்தில் இருந்து மற்றொருவருக்கு மிக எளிதில் பரவும் என்பதால், கொரோனா பாதித்தவரின் பெயர் மற்றும் அவர் வசிக்கும் பகுதி ஆகியவற்றை அரசின் இணையதளத்தில் அதிகாரபூர்வமாக வெளியிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அவ்வாறு செய்தால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்காணிக்கவும், அவர்களுடன் தொடர்பில் இருப்பதை தவிர்க்கவும் முடியும் என மனுவில் தெரிவித்திருந்தார்.

மனு தள்ளுபடி: இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி காட்சி மூலம் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், இந்திய அரசியலமைப்பு சட்டம் 21வது பிரிவின் படி, ஒருவரின் விவரங்களை வெளியிடுவது தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. அதனால் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களையோ, அவர்களின் விவரங்களை பற்றி வெளியிட்டால் அது சமூக பிரச்சனையை ஏற்படுத்தும் என வாதிட்டார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories

Tech |