10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து நாடு முழுவது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிலையங்களையும் அரசு காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. அனைத்து கல்லூரி தேர்வுகள் மற்றும் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக மார்ச் 27ம் தேதி நடைபெற இருந்த 10 வகுப்பு பொதுத் தேர்வும் ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி இன்று 12 குழுக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அனைத்து பணிகளுக்குமான அடிப்படையாக உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு என்பது ஒருவர் அடுத்த கட்டத்துக்குநகர்வதற்கான முக்கியமான தேர்வாகும் அதனால் ரத்து செய்ய வாய்ப்பில்லை என கூறினார். மேலும் 10ம் வகுப்பு தேர்வை எப்போது நடத்துவது என்பது ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு சத்தியமங்கலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் மே மாதம் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்திற்கு பின் முதல்வர் பழனிசாமி அறிவிப்பார் என தகவல் அளித்துள்ளார்.