காவல்நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகளே பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால், சிலர் சட்டவிரோதமாக மதுவை பதுக்கி விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் மீது காவல் துறையினரும் அவ்வபோது தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை புது வண்ணாரப்பேட்டையில் சட்டவிரோதமாக மது விற்றவர்களிடமிருந்து மது பாட்டில்களை கைப்பற்றி அதிகாரிகள் காவல் நிலையத்தில் உள்ள பெட்டகத்தில் பூட்டுப் போட்டு பூட்டி வைத்தனர். தற்போது அந்த பூட்டை உடைத்து சுமார் 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் திருடப்பட்டுள்ளது. காவல் நிலையத்திலேயே பூட்டை உடைத்து திருடியது யார் என்று விசாரிக்கையில்,
அதே காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்த முருகவேல் மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை காவல் குடியிருப்பில் பணியாற்றிய முத்து ஆகிய அதிகாரிகள் தான் திருடியது என்பது தெரியவர, அவர்கள் இருவரும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். பின் துறைரீதியான விசாரணை மேற்கொண்ட பின் இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.