கடலூரில் சாரயம் காய்ச்சிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் மது பிரியர்கள் சட்டவிரோதமாக எங்கேனும் மது கிடைக்குமா? என்று அலைந்து திரிந்து வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் முந்திரி தோப்புக்குள் சாராயம் காய்ச்ச உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பின் இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் சோதனையில் ஈடுபட்ட போது, அய்யப்பன் என்ற நபர் சாராயம் காய்ச்சி கொண்டிருக்கும்போதே கையும் களவுமாக பிடிபட்டார். இதையடுத்து அவருடன் இருந்த ஒரு பெண் உட்பட 5 க்கும் மேற்பட்ட நபர்கள் தப்பிச் செல்ல, அவர்களை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.
பின் அய்யப்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்கையில், ஊரடங்கு சமயத்தில் மதுக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் சாராயம் காய்ச்சி விற்றால் அதிக லாபம் ஈட்டலாம். விரைவில் பணக்காரனாகி விடலாம் என்ற ஆசையில் இரவு பகலாக கடும் உழைப்பை போட்டு சாராயம் காய்ச்சி வந்தோம்,
அப்போது காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டோம் என்று தெரிவித்தார். இதே பண்ரூட்டி பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காய்ச்சிய சாராயத்தை குடித்தததால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க, 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை போனது குறிப்பிடத்தக்கது.