சீனாவிற்கு சென்ற கனடா விமானம் எந்த பொருட்களையும் கொள்முதல் செய்ய முடியாமல் கனடாவிற்கு திரும்பியதாக அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதிலும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி பல நாடுகளை சிதைத்துள்ள நிலையில் அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கனடாவிலிருந்து சீனாவிற்கு சென்ற இரண்டு விமானங்கள் போன மாதிரியே வெறுமையாக திரும்பியுள்ளது என செய்தியாளர்களிடம் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா பிரச்சனையால் அத்தியாவசிய பொருட்களாக மாறிப் போன முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் விஷயத்தில் சீனாவில் சிக்கலான சூழல் உருவாகி இருப்பதற்கு இதுவே ஒரு உதாரணம். முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்க சென்ற எங்கள் நாட்டு விமானங்கள் எந்த பொருளும் இல்லாமலேயே திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள் தேவைப்படும் ஒரு சூழலில் கடும் போட்டியுடன் நாம் போராடி வருகிறோம். சீனாவில் விமானங்கள் எவ்வளவு நேரம் நிற்க வேண்டும் என்பதற்கு அதிக அளவு கட்டுப்பாடுகள் இருக்கிறது. அந்த நேரத்திற்குள்ளாக பொருட்கள் விமானத்தில் நிரப்பப்பட்டாலும் இல்லை ஒரு பொருள் கூட விமானத்தில் ஏற்ற படவில்லை என்றாலும் விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு பின்னர் கட்டாயப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்டு விடும்.
பாதுகாப்பு உபகரணங்களை தயாரிக்கும் நிறுவனத்திடம் இருந்து விமான நிலையத்திற்கு அனுப்பப்படும் பொருட்களை கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தி சரியான நேரத்திற்கு விமான நிலையத்திற்கு பொருட்கள் வந்து சேர்வது மிகவும் கடினம். அவ்வாறு பொருட்கள் வர தாமதமான காரணத்தினால் கனடா விமானம் வெறுமையாக திரும்பியுள்ளது என கூறியுள்ளார்.