நாகை மாவட்டத்தில் வீட்டைவிட்டு வெளியே வரும் மக்கள் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையை கண்டிப்பாக கையில் வைத்திருக்க வேண்டும் என நகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே தங்களது வீடுகளை விட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியே வரும் மக்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
ஒரு சில அடையாள அட்டைகள் மக்களுக்கு நாள், தேதி குறிப்பிட்டு வழங்கப்பட்டுள்ளது. மக்கள் அந்தந்த தேதி மற்றும் நாள்களில் மட்டும்தான் பொருட்களை வாங்க வெளியே வரவேண்டும். அப்படி வரும்போது அடையாள அட்டையுடன் ஆதார் அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டையையும் கையில் எடுத்து வர வேண்டும்.
இதை மீறினால் கொள்ளை நோய் தடுப்பு சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம் ஆகிய மூன்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என வேதாரண்ய நகராட்சி ஆணையர் எச்சரித்துள்ளார்.