2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வாபஸ் பெற்றது.
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 20,471 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 3,960 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 652 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 251 பேர் உயிரிழந்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது.
இந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,579,894 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நாடு முழுவதும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் ரத்து செய்யப்பட்டு ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 27ம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 2020ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் அமர்நாத் யாத்திரை சென்று அங்குள்ள பனி லிங்கத்தை தரிசனம் செய்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுவதாக வெளியான அறிவிப்பால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து 2020-ம் ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் வாபஸ் பெற்றது. அமர்நாத் யாத்திரை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் அளித்துள்ளனர்.