அமெரிக்காவில் முதலில் அறிவிக்கப்பட்ட மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே முதல் மரணம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
வல்லரசு நாடான அமெரிக்காவையும் கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்துள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மிகவும் திணறிவருகிறது. மற்றொருபுறம் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்று ஒரு சிலர் தொடர்ந்து கோரிக்கைகளை வைத்துவருகிறார்கள்.
இந்நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டதற்கு இரண்டு வாரம் முன்பே அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாடு அறிவித்துள்ளது. இது தொடர்பாக கலிஃபோர்னியா மாகாணத்தின் அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி 6 மற்றும் 17ஆம் தேதிகளில் வீடுகளில் இறந்த இரண்டு பேரின் உடல்கள் பிரேதபரிசோதனை செய்யப்பட்டது.
அந்த பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறை பணியாளர்கள் உயிரிழந்தவர்களின் உடல்களை தீவிரமாகப் பரிசோதித்துவருகின்றனர். இதனால் வரும் காலங்களில் ஏற்கனவே வெளியிட்டுள்ள இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் வாஷிங்டன் மாகாணம் கிர்க்லேண்டில் பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி கொரோனாவால் முதல் மரணம் ஏற்பட்டதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. ஆனால் தற்போதைய தகவலின்படி பிப்ரவரி 6ஆம் தேதியிலேயே அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவசரகால செயல்பாட்டு மையம் வெளியிட்ட அறிக்கை மூலம் அமெரிக்காவில் கொரோனா தொற்று பரவல் நாம் நினைத்ததைவிடப் பல வாரங்களுக்கு முன்னரே பரவியிருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. இதேபோன்று சீனா தனது நாட்டில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்த தகவல்களில் மாற்றம் செய்ததற்கு அமெரிக்கா கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.