அட்சயதிருதியை முன்னிட்டு ஆன்லைன் மூலம் தங்கநகைகளை வாங்கலாம் என முன்னணி நகைக்கடை நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
ஆண்டுதோறும் அட்சயதிருதியை வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தினத்தில் தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். தங்கம் விலை அதிகரித்தாலும் இந்த அட்சயதிருதியை அன்று மக்கள் கூட்டம் நகைக்கடைகளில் அலைமோதும். இந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர்த்து, பிற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது.
30வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு 2ம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தங்க விற்பனை கடைகள் மூடப்பட்டாலும் உலக சந்தையில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4 ஆயிரத்தை தாண்டி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நிலையில், வரும் 26ம் தேதி அட்சயதிருதியை தினத்தையொட்டி ஆன்லைன் மூலம் தங்கம் வாங்கலாம் என நகை கடைகள் அறிவித்துள்ளன.
இது தொடர்பாக தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க உறுப்பினர் கூறியதாவது, ” தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால் நுகர்வோருக்கு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஊரடங்கு தொடங்கும் சமயத்தில் ஒரு கிராம் ரூ.3,952 ஆக இருந்தது. தற்போது அதே ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,532 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தங்கத்தின் விலை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அட்சயதிருதியை முன்னிட்டு தங்கம் வாங்கும் நுகர்வோர்களுக்காக நிறுவனங்கள் சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதாவது, அட்சயதிருதியை அன்று கடைகளை திறக்காமல், வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாக நகையை ஆர்டர் செய்யலாம் என்றும், அவ்வாறு நகை ஆர்டர் செய்து பணத்தை செலுத்தும் பட்சத்தில் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் செயலுக்கு ஒரு கூப்பனை அனுப்பும் எனவும் தெரிவித்துள்ளார். ஊரடங்கு முடித்த பிறகு அந்த கூப்பன்களை கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கத்தை வாங்கிச் செல்லலாம் என நகைக்கடை நிறுவனங்கள் மிடுவெடுத்துள்ளதாக” தகவல் அளித்துள்ளார்.