தருமபுரி மாவட்டத்தில் முதல் முறையாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,683 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 90 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் மொத்தம் 752 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் இன்று உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் 27 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 400ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 54 பேரில், சென்னையில் 27பேரும், சேலம் – 5, நாமக்கல் – 4, விருதுநகர் – 3, திண்டுக்கல் – 3, மதுரை – 2 பேரும், செங்கல்பட்டு, ராமநாதபுரம், தென்காசி, தஞ்சை, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், விழுப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஒருவருக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு கொரோனா பரவிய நிலையிலும் புதுக்கோட்டை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த மாவட்ட ஆட்சியர்கள் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். எனினும் துரதஷ்டவசமாக கடந்த ஒரு நாளுக்கு முன்னர் புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தர்மபுரியிலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.