தொழிலாளிகள் நிலை
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள காரணத்தினால் வேலை இழப்பு ஏற்பட தினசரி கூலி தொழிலாளிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி பிராந்தியத்தில் கட்டுமான தொழிலுக்காக இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என கால்நடையாக புறப்பட்டனர்.
உணவு, தங்குமிட சிக்கல் ஏற்பட்டதால் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று மகாராஷ்டிராவில் இருந்த வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 3000 பேர் மும்பை பாந்திரா மேற்கு ரயில் நிலையம் அருகே கூடி போராட்டம் நடத்தினர். தடியடி நடத்தி அவர்களை விரட்டிய காவல்துறையினர் ஊரடங்கை மீறியதாக ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
கொரோனா பரிசோதனைக்கு ரபிட் கிட்
மத்திய அரசின் ஒப்புதலுடன் கொரோனா சோதனைகளை விரைவாக செய்ய ஒரு லட்சம் ரபிட் டெஸ்ட் கிட்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்ய தமிழக அரசு ஒப்பந்தம் செய்தது. ஏப்ரல் 17 அன்று சீனாவிலிருந்து 24 ஆயிரம் ரபிட் டெஸ்ட் கிட்கள் தமிழகத்திற்கு வந்தன.
இறக்குமதி செய்யப்பட்ட ரபிட் டெஸ்ட் கிட் தரத்தில் மிகவும் மோசமாக இருப்பதால் பயன்பாட்டை நிறுத்தியதாக ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
மருத்துவர்களின் பாதுகாப்பு
சென்னையின் நோயின் தாக்கத்தினால் உயிரிழந்த மருத்துவர் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது வன்முறை ஏற்பட்டது கடும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதனை தொடர்ந்து வேளாண்காடு கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களை தாக்கினால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க மத்திய அரசு புதிய சட்டத்தை அறிவித்தது.
தமிழகத்தில் கொரோனா
ஏப்ரல் 16 நிலவரப்படி இந்தியா முழுவதும் 20 மாநிலங்கள் 5 யூனியன் பிரதேசங்களில் இருக்கும் 170 மாவட்டங்களை அதிக தொற்று உள்ள இடங்களாக மத்திய அரசு அறிவித்தது. தமிழ்நாட்டில் 22 மாவட்டங்கள் தீவிர நோய் தொற்று மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகமான ரெட் மண்டலங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.