ஊரடங்கு காரணமாக குடியேறிய மக்களை எத்தனை நாட்களுக்கு பூட்டிவைக்க முடியும் என காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு 31வது நாளாக அமலில் உள்ளது. சுமார் ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த ஊரடங்கு காலத்தில் நாடு முழுவதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இருப்பினும் நாட்டில் கொரோனா பாதிப்பு முடிவுக்கு வராததால், ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், 3வது முறையாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில், ஊரடங்கு தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது, ” நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல, மே 3ம் தேதிக்கு பிறகு அவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல ரயில்களையும் பஸ்களையும் அரசு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.