கடலூரில் வருகின்ற 26ஆம் தேதி முழு ஊரடங்கை கடைபிடிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில் ஆங்காங்கே ஊரடங்கு மேலும் கட்டுப்பாட்டுடன் நடைமுறைப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வருகிற 26-ஆம் தேதி முழு ஊரடங்கு கடலூர் மாவட்ட மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அந்நாளில் மருந்துக் கடைகளைத் தவிர மற்ற அனைத்துக் கலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும், பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.