சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகின்றது.. இதனை தடுக்க இந்தியாவில் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. நாட்டுக்காக தங்களது உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
அந்த வகையில், குஜராத் மாநிலம் அகதமாபாத்தின் வதோதரா பகுதியில் ராணுவ மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்த 3 கைவினைஞர்கள் வீரர்களுக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
பின்னர் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இருப்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். இதையடுத்து, பயிற்சி மையத்தில் வீரர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருமே கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.