ஒட்டுமொத்த நாடே காரோணவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
இந்த நேரத்தில் காங்கிரசின் இந்த நடத்தை ஒருநாள் கேள்விக்குட்படுத்தப்படும் என்றும் இதற்கான விளக்கத்தை அவர்கள் வருங்காலத்தில் அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். கொரோனா எனும் கொடிய வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதியோடு முடிவடையும் இந்த ஊரடங்கு 31வது நாளாக இன்று அமலில் உள்ளது.
இந்த நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுடன் சோனியா காந்தி காணொளி காட்சி மூலம் உரை நிகழ்த்தினார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, நாட்டில் தவறான எண்ணங்களுடன் வகுப்புவாத வைரஸை பாஜக பரப்பி வருகிறது. பாரபட்சமாக மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்கிறது. பாஜகவின் இந்த செயல் நாட்டின் ஒவ்வொரு இந்தியரையும் கவலையடையச் செய்துள்ளது.
நமது சமூக நல்லிணக்கத்திற்கு இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது போன்ற பல்வேறு குற்றசாட்டுகளை சோனியா காந்தி முன்வைத்தார். இதை சரி செய்ய எங்களது கட்சி கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கிறது எனவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இவரது இந்த அறிக்கைக்கு பிறகு இன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இது தொடர்பாக காங்கிரஸ் விரைவில் விளக்கம் அளிக்க வேண்டும் என குற்றம் சாட்டியுள்ளார்.