வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வியர்க்குரு பிரச்சனையை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.
வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர். பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகமாகி பாதிக்கப்படுவார்கள். ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச் சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல் சூட்டைத் தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து விடுகிறது.
இது சிறுசிறு கொப்புளங்களை குழந்தைகளின் உடலில் ஏற்படுத்தும். இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் கொப்புளங்கள் சிவந்து காணப்படும். மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக் கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி விடுகிறது.
தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வை வராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம். அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்ட வேண்டும். இரண்டு வேளை குளிப்பாட்டினால் கூட நல்லது. அப்படி முடியாவிட்டால் தண்ணீர் வைத்து துண்டுக் குளியல் செய்தால் கூட நல்லது தான்.
சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்க கூடாது. ஏனெனில் அவைகள் வியர்வை சுரப்பிகளின் துளைகளை அடைத்து விடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம். மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.
எப்போது மருத்துவரை அணுகுவது?
அதிக அளவில் எரிச்சல் அதிகரித்தாலோ.? அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ.? மருத்துவரை உடனே அணுக வேண்டும். குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.