அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நேற்று 7 வது முறையாக 60 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளது
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் வணிக தொடர்பாகவும் , தங்களது தேவைக்காகவும் செயற்கைகோள்களை விண்ணிற்கு செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் உலகம் முழுவதிலும் அதிக வேகமான இணைய சேவையைவழங்க ‘ஸ்டார் லிங்க்’ என்னும் திட்டத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்துவதற்கு முயற்சி செய்துவருகின்றது.
இந்த திட்டத்தின்படி 12 ஆயிரம் செயற்கை கோள்களை 2024-ம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்துவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் முடிவு செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து கடந்த வருடம் மே மாதம் முதற்கட்ட நடவடிக்கையாக தலா 260 கிலோ எடை கொண்ட 60 செயற்கை கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது . அதனையடுத்து, ஒவ்வொரு முறையும் 60 செயற்கைகோள் வீதம் 6 கட்டங்களாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று 7-வது கட்டமாக மேலும் 60 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது. ‘பால்கான் 9’ ராக்கெட் மூலம் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. புதிதாய் அனுப்பப்பட்ட செயற்கை கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பிய செயற்கை கோள்களுடன் சேர்ந்து செயல்பட உள்ளது .