உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது
ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார நிறுவனம் ஐநா சபையின் துணை அமைப்பாகும். உலக அளவில் சுகாதார விவகாரங்களை இந்நிறுவனமே கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்நிறுவனம் செயல்படுவதற்கான அதிகளவு நிதிப் பங்களிப்பை அமெரிக்கா தான் வழங்கி வந்தது.
தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று பரவும் என்ற உண்மையை மறைத்ததாகவும் கூறி அந்நிறுவனத்திற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டார். இந்நிலையில் தொற்றுக்கு எதிராக உலக அளவில் முயற்சி செய்து வரும் உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுப்பதாக சீனா அறிவித்திருக்கின்றது.
அமெரிக்கா நிதி உதவியை நிறுத்த உள்ளதாக கூறிய நிலையில் சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, “ஏற்கனவே 20 மில்லியன் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கிய நிலையில் மேலும் 30 மில்லியன் டாலர்கள் சீனா வழங்கவுள்ளது. இது வளரும் நாடுகளின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு உதவும்” என பதிவிட்டுள்ளார்.