கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து சென்றவர்களுக்கு அறிகுறிகள் ஏதும் இன்றி மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனாவை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதன் விளைவாக கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்ற பலரும் குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் தொற்றிலிருந்து விடுபட்டு சென்ற பலருக்கு 70 நாட்களுக்கு பின்னர் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் சோதனை மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் சீன அதிகாரிகளை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. தொற்றிலிந்து குணமான பிறகும் அறிகுறி ஏதும் இன்றி உடலில் கொரோனா வைரஸ் இருப்பது குழப்பத்தை உருவாக்கியுள்ளது. இதுபோன்று அறிகுறிகள் ஏதும் இல்லாமல் பாதிக்கப்பட்ட நிலையில் எத்தனை நோயாளிகள் இருக்கிறார்கள் என சீன அதிகாரிகள் இதுவரை சரியான தகவல்களை வெளியிடவில்லை.
ஆனால் ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட பிற ஊடகங்களால் பெறப்பட்ட சீன மருத்துவமனைகளின் தகவலின் அடிப்படையில் குறைந்தது டஜன் கணக்கானவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது. சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி மீண்டும் கொரோனா தொற்று இருப்பதாக தெரிய வந்த யாரும் மற்றவர்களுக்கு தொற்றை பரப்பியதாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது. அதோடு மற்ற நாடுகளில் இருக்கும் சுகாதார அதிகாரிகளிடம் இந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து உலக அளவில் பரிந்துரை செய்யப்பட்ட 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் மீதும் சந்தேகம் அதிகரித்துள்ளது. ஏனெனில் தென்கொரியாவில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நான்கு வாரங்களுக்கு பின்னரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதேசமயம் இத்தாலியில் ஒரு மாதத்திற்கும் அதிகமான நாட்களுக்குப் பின்னரே கொரோனா இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தொற்றிலிருந்து விடுபட்டவர்களுக்கு 60 நாட்களுக்குப் பிறகும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கவலையை அதிகரிப்பதோடு குணம் அடைந்தவர்களின் உடற்பாகங்களில் வைரஸ் தங்கியிருக்கலாம் எனவே அவர்கள் மீண்டும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் ஆனால் இதில் அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தாது எனவும் தென்கொரிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.