நாடு முழுவதும் இன்று கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 24 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,429 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மொத்த இறப்புகள் எண்ணிக்கை 723-ல் இருந்து 775 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, நாட்டில் கொரோனாவால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,452-லிருந்து 24,506 ஆக அதிகரித்துள்ளது. அதில் 18,668 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேசமயம் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
நேற்று 4,814 பேர் குணமடைந்த நிலையில், இன்று 5063 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், 27ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி கட்சி மூலம் 3வது முறையாக ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த கூட்டத்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே உள்ளது. இந்த நிலையில், நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,817 பேரும், ராஜஸ்தானில் 2,034 பேரும், மத்திய பிரதேசத்தில் 1,852 பேரும், தமிழகத்தில் 1,755 பேரும், உத்தரபிரதேசத்தில் 1,621 பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.