செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 26ம் தேதி காலை 6 மணி முதல் 29ம் தேதி இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சுமார் 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டு மட்டும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுவதிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊரடங்கு பகுதிகள்:
சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட் பட்ட அய்யப்பன் தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மவுலிவாக்கம், பெரிய பணிச்சேரி,நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் நாளை முதல் 29-ம் தேதி இரவு 9 மணிவரை முழுஊரடங்கு அமல்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்ட ஊரடங்கு பகுதிகள்:
சென்னை மாநகராட்சி பகுதிக்கு அருகில் உள்ள தாம்பரம், பல்லாவரம் வட்டத்தில் உள்ள தாம்பரம், பல்லாவரம் பெருநகராட்சிகள், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக் கம் நகராட்சிகள், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் பேரூ ராட்சிகள், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கைவாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு ஆகிய 2 கிராம ஊராட்சிகள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வரும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் 29-ம் தேதி இரவு 9 மணிவரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.
முழு ஊரடங்கில் எவை இயங்கும்:
முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும். கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி சந்தைகள் விதிமுறைகளின் படி செயல்படும். முழு ஊரடங்கு காலத்தில் காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய நடமாடும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.