திருவாரூர் மாவட்டத்தில் நாளை ஒருநாள் மட்டும் முழு ஊரடங்கு என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1755 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 22ஆக உயர்ந்துள்ளது. மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதனால் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூரில் நாளை ஒருநாள் மட்டும் முழு முடக்கம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மருந்துக் கடைகள் தவிர்த்து அனைத்து கடைகளும் நாளை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பெரம்பலூரை சுற்றி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.