80களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்கிருக்கிறார்.
பழைய படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகர் ராமராஜன் மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் ஆவார். சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டுமென்ற ஆசையில் சென்னைக்கு வந்து டைரக்டர் ராமநாராயணனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தார். முதன் முதலில் ‘மண்ணுக்கேத்த பொண்ணு’ படத்தின் மூலம் டைரக்டர் ஆனார். அந்த படம் பெரிய அளவில் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து “மருதாணி,’ ‘மறக்கமாட்டேன்,’ ‘ஹலோ யார் பேசுறது’ உள்ளிட்ட பல படங்களை டைரக்டு செய்தார்.
அதன் பிறகு ‘நம்ம ஊரு நல்ல ஊரு’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். முதல் படமே 100 நாட்களையும் கடந்து ஓடி வெற்றி விழா கொண்டாடியது. அப்படத்தை தொடர்ந்து ‘கரகாட்டக்காரன்’ மிகப்பெரிய அளவில் வெற்றியாக அமைந்தது. திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடி, இந்த படம் வெள்ளி விழா கண்டது. இதுவரை 44 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் நடித்த அத்தனை படங்களும் பூஜை போட்ட அன்றே விற்பனை ஆனது.
இந்நிலையில் பல வருட இடைவெளிக்குப் பின், ராமராஜன் மீண்டும் டைரக்டு செய்ய களமிறங்குகிறார். இதற்காக இன்றைய காலகட்டத்தில் இருக்கக்கூடிய முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஜய் சேதுபதியிடம் ஒரு கதை சொல்லிருக்கிறார். ராமராஜன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ராமராஜன் நடிக்கவில்லை. டைரக்டு செய்வதோடு சரி. தொடர்ந்து அவர் இயக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.