சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் பயன்படுத்த முடியாது என தெரியவந்துள்ளது.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்த KN95 வகையை சேர்ந்த ஒரு மில்லியன் முகக்கவசங்களும் தரக்கட்டுப்பாடு சோதனையில் வெற்றி பெறாத காரணத்தினால் அதனை பயன்படுத்த முடியாது என கனடா அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் KN95 முகக்கவசம் தரத்தில் N95 முகக்கவசங்களுக்கு இணையானவை. உலகின் பல நாடுகளுக்கு சீனாவில் இருந்துதான் முகக்கவசங்கள் சப்ளை செய்யப்படுகிறது என தெரிவிக்கும் பொழுது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சரான அனிதா ஆனந்த் பொருட்களை சீனாவில் இருந்து வெளியில் கொண்டு வருவதே கடினமான செயல் எனக் கூறினார்.
இதற்கு முன்னதாக சீனாவிலிருந்து முகக் கவசங்கள் வாங்கிவர அனுப்பப்பட்ட கனடா விமானங்கள் கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாக எந்த பொருளும் இல்லாமல் வெறுமையாக நாடு திரும்பியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கொரோனா பேராபத்து காலத்தில் மிகவும் முயற்சி செய்து வாங்கப்பட்ட முகக் கவசங்களை பயன்படுத்த முடியாத சூழல் கடும் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.