கொரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனை மருத்துவமனைக்கு பார்க்க சென்ற மனைவி அவரது மொபைலை பார்த்து கதறி அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கணவரை பார்க்க ஓடோடி வந்த காதல் மனைவியால் இறுதியாக கணவரை பார்க்க முடியவில்லை. ஆனால் அவரது கணவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தனது மொபைலில் சில பிரியாவிடை செய்திகளை விட்டு சென்றிருந்தார். அமெரிக்காவின் கனெக்டிகட் பகுதியை சேர்ந்த ஜான் சுமார் ஒரு மாத காலம் கொரோனாவுடன் போராடி வந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த மகனைக் காண சென்ற ஜானின் மனைவி கேட்டி கடைசி நிமிடங்களில் கணவனுடன் நேரத்தை செலவிட வேண்டும் என்று ஆசையில் ஓடோடி வந்துள்ளார். இருந்தும் அவரால் அவரது கணவரை உயிருடன் பார்க்க முடியவில்லை. ஏமாற்றம் அடைந்த மனைவி கேட்டி கணவனுடைய பொருட்களை சேகரித்துக்கொண்டார். அப்போது அதில் இருந்த மொபைலை எடுத்து பார்த்த மனைவி கண்ணீரை அடக்க முடியாமல் அழுதுள்ளார்.
மொபைலில் தனது குடும்பத்திற்கு கடைசி பிரியாவிடை செய்தி விட்டு சென்றுள்ளார் ஜான். அந்த செய்தியில் நான் உங்களை முழுமனதோடு நேசிக்கின்றேன். நீங்கள் தான் எனக்கு சிறப்புமிக்க ஒரு வாழ்க்கையை கொடுத்தீர்கள். நான் சந்தித்ததில் மிகவும் அழகான மற்றும் அருமையான பெண் நீதான் கேட்டி. நம் மகன் ப்ரெடியிடம் சொல் அவன்தான் எனது சிறந்த நண்பன். அவனைப் போன்ற ஒரு மகனைப் பெற்றதற்கு நான் மிகவும் பெருமை கொண்டேன் என்று.
நம் மகள் பெனிலோப்பிடம் அவள் ஒரு இளவரசி என சொல். வாழ்க்கையில் எதுவெல்லாம் அவள் ஆசைப்படுவாளோ அது அனைத்தும் அவளுக்கு கிடைக்கும் என சொல். நான் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி. உன்னையும் நமது குழந்தைகளையும் நேசிக்கும் ஒருவரை நீ கண்டு கொண்டால் அதுவும் எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருங்கள் என்று எழுதப்பட்டிருந்த அந்த செய்தியை வாசித்த கேட்டியால் கண்ணீர் விட்டு கதறதான் முடிந்தது.