கொரோனா வைரஸ் காரணமாக மகாரஷ்டிராவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மும்பை மற்றும் புனே நகரங்களில் மே 18ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 394 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், 18 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 6,817 ஆக அதிகரித்துள்ளது. அதில், 4,447 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், 1020 பேர் புனே பகுதியை சேர்ந்தவர்கள். மேலும் மொத்த இறப்புகள் எண்ணிக்கை 301 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை தாராவியில் மட்டும் கொரோனா பாதிப்பு 220-ஐ தாண்டியது, மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக ஊரடங்கு அமலில் உள்ளது.
இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மகாரஷ்டிராவின் மும்பை மற்றும் புனேவில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மே 18ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெற அனுமதி வழங்கக்கூடாது எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மே3ம் தேதிக்கு பிறகு அத்தியாவசியமற்ற அனைத்து சேவைகளும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் குறைந்தது 15 நாட்களுக்குப் பிறகே செயல்பட அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு பரிசீலித்து விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.